முல்லையில் புத்தர் சிலை அவசரமாக திறப்பு! - Yarl Thinakkural

முல்லையில் புத்தர் சிலை அவசரமாக திறப்பு!

முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை இன்று புதன்கிழமை அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.

நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14ஆந் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்ற வேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் நீதமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெறவிருந்தது. எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம் அது தொடர்பன வழக்கை நேற்று நடத்துமாறு கோரியிருந்தனர்.

வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராம மக்களின் சார்பில் முன்னிலையானவர்களால் தெரிவிக்கப்பட்டது.

முரண்பட்ட பௌத்த துறவியை எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்ட விரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து குறித்த இடத்துக்கு விரைந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நிலமைகளை நேரில் கண்காணித்தார். அங்கிருந்த பௌத்த துறவிகள் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்தவர்கள் சிலரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
Previous Post Next Post