எதிர்கட்சி தலைவர் பதவியை நாமே தூக்கி எறிந்தோம்! -மார் தட்டுகிறார் மாவை- - Yarl Thinakkural

எதிர்கட்சி தலைவர் பதவியை நாமே தூக்கி எறிந்தோம்! -மார் தட்டுகிறார் மாவை-

தமிழ்தேசிய கூட்டமைப்பே எதிர்க்கட்சி தலைவர் பதவியை தூக்கி எறிந்தது. அதற்காக நாங்கள் போராட்டங்கள் நடாத்தப்போவதில்லை. காரணம் பதவிக்கு அடிபடுவது அல்ல எங்களுடைய கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா கூறியுள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரிய தலமையில் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங் களுக்கு கருத்து கூறும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்:-

எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்காக நாங்கள் பெரும் போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதில்லை. அதுவல்ல எங்கள் பிரச்சினை. அது அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையிலும் தான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஜனாதிபதியோ பிரதமரோ நாடாளுமன்ற உறுப்பினரோ எவராக இருந்தாலும் ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்னர் அக்கட்சியிலிருந்து விலகினால் அவர் தன்னுடைய உறுப்புரிமையை இழப்பார்.

அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இடமுண்டு. அதைத்தான் எங்கள் தரப்பிலிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்கள். மகிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சிகிகுரியவர். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

ஆனால் தற்போது அவர் அக்கட்சிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பெரமுனவில் இணைந்திருந்தால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியாது என்பதனைத் தான் எங்கள் தரப்பினர் எடுத்துக்கூறியிருந்தனர்.

ஆனால்இ அது தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவும் இல்லை. தீர்க்கப்படவும் இல்லை. சிலர் அதனை நீதிமன்றம் சென்று தான் தீர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் சென்று எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வரவில்லை.

எனினும் சில கேள்விகளையும் விடையங்களையும் நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுப்பியிருந்தோம். அதற்கான பதிலை அவரை விரைவில் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்பொழுது என்ன நிலைமை என்பதை நாங்கள் பார்க்கலாம் என்றார்.இதேவேளை அரசியல் தீர்வு விடையம் தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்

கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிபுணர் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்க இருந்தது. அதற்கு முதல் இடைக்கால அறிக்கை ஒன்று வந்திருக்கிறது. அதை மேம்படுத்தியதான வரைபு நிபுணர் குழுவினால் முன்வைக்கப்படவிருந்தது.

ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 7ஆம் திகதி நவம்பர் மாதம் நிபுணர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. எனினும் மீண்டும் நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 4ஆம் திகதி

புதிய அரசியமைப்புக்கான வரைபு ஒன்று முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவர் வைக்கும் வரைபு தமிழ் மக்களால், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பது

தொடர்பில் ஆராயலாம். அதற்கான விமர்சனங்கள் பலவிதத்திலும் வந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் சேர்த்து பெப்ரவரி 4ம் ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாங்கள் ஆராய்வோம்.

அதனை ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது மேலதிகமாக ஏதாவது சேர்த்துக் கொள்ளலாமா? அதில் திருத்தங்களைக் கொண்டுவரலாம் என்பது தொடர்பிலும் பரிசீலிப்போம் முடிவு எடுப்போம் என்றார்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற நீதிமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் அரசியல் கைதிகள் விடையத்தில் நீதிமன்றத்தை நாடவில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொதுமக்களால் வைக்கப்படகின்றதே என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர்

இது திட்டமிட்டு ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. வரலாறு தெரியாதவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். நாங்கள் கைதிகள் சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

Previous Post Next Post