சங்ககார ஜனாதிபதி வேட்பாளரா? - Yarl Thinakkural

சங்ககார ஜனாதிபதி வேட்பாளரா?

ஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

அமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரவும் அண்மையில் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தினர் எனத் தகவல் வெளியாகியிருந்தது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது குறித்து அமைச்சர் ராஜிதவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர்:-

சுகாதார விவகாரம் குறித்தே எனக்கும் சங்ககாரவுக்கும் இடையில் சுமார் 10 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதித் தேர்தல் குறித்தும், பொது வேட்பாளர் சம்பந்தமாகவும் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் போலியானவையாகும்.

சங்ககார சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் அதை விளையாடலாம். நாட்டில் ஜனாதிபதி யார் என்பதை அவரால் தீர்மானிக்க முடியாது. அத்துடன், அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றார்.

அதேவேளை, தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என  சில  மாதங்களுக்கு முன்னர் விசேட அறிக்கையொன்றை சங்ககார விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post