ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்! - Yarl Thinakkural

ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்!

ராஜபக்ச குடும்பம் இந்நாட்டில் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. நாட்டை மீட்டெடுக்கவே பாடுபட்டது. இந்தக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கினால் அதிசயிக்க ஒன்றும் இல்லை.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், உங்களின் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்று தமிழ் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இந்த நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க ராஜபக்ச குடும்பம் அயராது உழைத்தது. பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருந்துகூட ராஜபக்ச குடும்பம் மயிரிழையில் தப்பியது.

ராஜபக்ச குடும்பம் இந்நாட்டில் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. நாட்டை மீட்டெடுக்கவே பாடுபட்டது. இந்தக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கினால் அதிசயிக்க ஒன்றும் இல்லை. வெற்றிதான் எமது இலக்கு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இப்போதைக்குக் கூறமாட்டோம்.

எனினும், வெற்றியை உறுதிப்படுத்தும் பொருத்தமான வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நாம் களமிறக்குவோம்.

நாம் முன்னேற்றம் அடையச் செய்த நாட்டை நாசமாக்கிக்கொண்டிருக்கும் ரணில் தரப்பினரை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் என்றார்.
Previous Post Next Post