யாழ்.மாநகர மேயருக்கு சி.ஐ.டி அழைப்பு!  - Yarl Thinakkural

யாழ்.மாநகர மேயருக்கு சி.ஐ.டி அழைப்பு! 

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைகளுக்காக குற்றத்துடுப்பு பிரிவிற்கு நாளை காலை 11 மணிக்கு வருமர்று பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த அழைப்பு நேற்று விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்னொல்ட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சபையின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல் அநாமதேயமான முறையில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் நாட்டப்பட்டிருந்தன.

அதனை அகற்றும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சம்பவ இடத்திற்கு வந்த ஒருசிலர் தாங்கள் ஒரு நிறுவமென்றும் தாங்கள் சட்டவிரோதமாக அமைக்கவில்லை என்றும் அனுமதிகள் பெற வேண்டிய இடத்தில் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் மாநகர சபையிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்திருந்தனர். 

ஆனாலும் சபை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அமைப்பதற்கு சபையின் அனுமதி பெறப்பட வேண்டுமென்று நாங்கள் தெரிவித்திருந்தோம். இல்லையென்று வாதிட்டவர்கள் நாங்கள் செய்வது தவறு என்றும் தாம் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் நாங்களும் நீதிமன்றம் செல்ல வேண்டி வருமென்றும் கூறிச் சென்றிரந்தனர்.

இதன் பின்னணியிலையே யாழ் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் எமக்கு எதிராக முறைப்பாடொன்றைப் பதீவு செய்துள்ளனர். அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காகவே நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதே வேளை சபையின் உறுப்பினர்களின் முடிவின் பிரகாரம் சபை எல்லைக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கேபிள் கம்பங்களை அகற்றுவதுடன் அதே போன்று அனுமதியியல்லாமல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்ற அனைத்தையும் அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
Previous Post Next Post