இறந்த மீனவரின் சடலத்தை ஒப்படைக்க உத்தரவு!  - Yarl Thinakkural

இறந்த மீனவரின் சடலத்தை ஒப்படைக்க உத்தரவு! 

இலங்கை கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மீனவரின் சடலத்தை அவரது உறவினர்கள் அல்லது யாழிலுள்ள இந்திய துணைத் தூரகத்திடம் ஒப்படைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

அதே வேளை அந்தப் படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய எட்டுப் பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் மேலும் உத்தரவிட்டார். இந்தியாவின் தமிழ் நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் ரோந்துக் கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் மாயமாகியிருந்தார். 

அதே நேரம் அவருடன் பயணித்த மீனவர்கள் உட்பட எட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். கடந்த சனிக்கிழிமை காணாமல் போயிருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மரிச்சாமி வயது 55 என்ற மீனவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டார். 

இது தொடர்பில் பொலிசார் மல்லாகம் நீதிவானுக்கு அறிவித்தனர். பொலிசாரும் நீதிவானும் இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு சென்றனர். சடலத்தை பார்வையிட்ட பார்வையிட்ட நீதிவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். 

இதற்கமைய உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக நேற்று முன்தினம் யாழ் போதனா வைத்திய சாலையில் கடற்படையினர் ஒப்படைத்திருந்தனர். அதே நேரம் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்திருந்தனர். 

இந் நிலையில் உயிரிழந்தவருடன் படகில் பயணித்த மூன்று மீனவர்களையும் யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் நேற்று பொலிஸார் முற்படுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலத்தையும் அவருடன் படகில் பயணித்த மீனவர்கள் மூவரும் அடையாளம் காட்டியிருந்தனர்.

இதன் பின்னர் வைத்தியசாலைக்கு வந்திருந்த ஊர்காவற்துறை நீதவான் சடலத்தை உயிரிழந்தவரின் உறவினர்கள் வந்தால் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் இல்லவிடின் யாழிலுள்ள இந்தியத் துணை தூதரகத்திடம் ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவுபிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் உறவினர்கள் இந்தியாவில் இருப்பதால் யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துடன் காங்கேசன்துறைப் பொலிஸார் தொடர்பு கொண்டிருந்தனர். 

ஆயினும் சடலத்தைக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாகவும் அதுவரையில் சடலத்தை வைத்தியசாலையில் வைக்குமாறும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். அதற்கமைய சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதே வேளை உயிரிழந்தவரின் படகில் பயணித்தவர்கள் உட்பட கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எட்டுப் பேரும் நேற்று ஊர்காவற்துறை நீதவான் வீட்டில் காங்கேசன்துறைப் பொலிஸார் முற்படுத்தியிருந்த நிலையில் அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post