வாள்வெட்டு குற்றவாளிகளை இனங்காட்ட சாட்சி மறுப்பு! அச்சுறுத்தலா?  - Yarl Thinakkural

வாள்வெட்டு குற்றவாளிகளை இனங்காட்ட சாட்சி மறுப்பு! அச்சுறுத்தலா? 

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட இரண்டாவது சாட்சி மறுப்புத் தெரிவித்தார். எனினும் முதலாவது சாட்சி நீதிமன்றில் முன்னிலையாகாததால் சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார். 

தைப்பொங்கல் தினமான கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இளைஞர்கள் இருவரை துரத்தி வந்து வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டாடப்பட்டது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டனர்.

மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த ஒருவரும் ஓட்டுமடத்தைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் ஆவா குழுவைச் சேர்ந்த 19,23 மற்றும் 25 வயதுடையவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று முந்தினம் மாலை முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், சாட்சிகளை ஒழுங்குபடுத்தி அடையாள அணிவகுப்பை நேற்று நடத்துமாறு அறிவுறுத்தினார். இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் சந்தேநபர்கள் மூவரும் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

முதலாவது சாட்சி மன்றில் தோன்றத் தவறிய நிலையில் இரண்டாவது சாட்சி முன்னிலையானார். சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டனர்.

எனினும் அவர்களை இனங்காட்ட தன்னால் முடியாது என்று இரண்டாவது சாட்சி மன்றுரைத்தார். இந்த நிலையில் சந்தேகநபர்களை வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
Previous Post Next Post