-சுகாதார சீர்கேட்டை தடுக்க அந்நியனாக மாறிய இளைஞர்- - Yarl Thinakkural

-சுகாதார சீர்கேட்டை தடுக்க அந்நியனாக மாறிய இளைஞர்-

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றிவந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் பலமுறை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான சந்தேநகபர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுகாதாரப் பரிசோதகர் சேவையைப் பயன்படுத்தினார் என்று அறியமுடிகின்றது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர மற்றும் நல்லூர் பொதுச் சகாதார பரிசோதகர்களுக்கு இளைஞன் அறிவித்துள்ளார். எனினும் இளைஞனின் தகவலை ஏற்று பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள் எவரும் சம்பந்தப்பட்ட வியாபார நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அந்த இளைஞன் பொதுச் சுகாதாரப் பரிசோதர் சேவைக்கான போலி அடையாள அட்டையை தனது பெயரில் தயாரித்து வியாபார நிலையங்களுக்குச் சென்று காலாவதியான மற்றும் சுகாதார சீர்கேடான உணவுப் பண்டங்களை அழித்துள்ளார். அவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைக்கு பொலிஸார் அழைத்த போதும் அந்த இளைஞன் செல்லவில்லை.

இந்த நிலையில் இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இளைஞன் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 

பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய பொலிஸார், இளைஞனைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று செவ்வாய் கிழமை முற்படுத்தினர். எனினும் சந்தேநபர் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் மன்றில் முன்னிலையாகவில்லை. 

அதனால் சந்தேகநபரை வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தேகநபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்று கடந்த சில வருடங்களுக்கு முன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post