-நீதிமன்றால் ரத்துச் செய்த லைசன்ஸ்- போலியாக மீளப் பெற்றவருக்கு விளக்கமறியல்! - Yarl Thinakkural

-நீதிமன்றால் ரத்துச் செய்த லைசன்ஸ்- போலியாக மீளப் பெற்றவருக்கு விளக்கமறியல்!

நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான தகவலை மூடிமறைத்து, அது தொலைந்துவிட்டது என போலி முறைப்பாட்டை வழங்கி பொலிஸ் அறிக்கை பெற்றதுடன் அதன்மூலம் புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்ற அரச சாரதி ஒருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஏழரைச் சனி நடக்கிறது போல், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிலேயே முன்னர் செய்த அதே குற்றச்சாட்டுக்கு பின்னரும் மாட்டிக்கொண்டுவிட்டார் என்று சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.

“சந்தேகநபருக்கும் இப்போதும் ஏழாரைச் சனி உள்ளது. அதனால்தான் அவர் விளக்கமறியலுக்குச் செல்கிறார்” என்று தெரிவித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சாரதி ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால்  நேற்றுக் கைது செய்யப்பட்டார். அவர் அரச திணைக்களம் ஒன்றில் சாரதியாகப் பணியாற்றுகின்றார்.

அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று குற்றச்சாட்டுப் பத்திரம் தயாரித்த போது, அவர் கடந்த வருடம் நடுப்பகுதியிலும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

அப்போது அவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்றால் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு ஆண்டுக்கு இடைநிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அந்தத் தடைக்காலப் பகுதிக்குள் அந்தச் சாரதியிடம் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளமை கண்டறியப்பட்டது.

அதுதொடர்பில் சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், “எனது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்துவிட்டது என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் அறிக்கை வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதனால் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் மோசடியாக புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
Previous Post Next Post