மங்கி கிடக்கும் தமிழர் வாழ்வு வளம்பெற வேண்டும்! -பொங்கல் வாழ்த்தில் விக்னேஸ்வரன்- - Yarl Thinakkural

மங்கி கிடக்கும் தமிழர் வாழ்வு வளம்பெற வேண்டும்! -பொங்கல் வாழ்த்தில் விக்னேஸ்வரன்-

மங்கலான பாதையில் செல்லும் அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழரின் அபிலாசைகள் தைத்திருநாளிலாவது எழுச்சி பெற வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள தை பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிபிடப்பட்டுள்ளதாவது:- தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இவ்வருடத் தொடக்கத்தில் வழிகள் யாவும் மங்கலாகவே தெரிகின்றன. அரசியல் யாப்பு, தேர்தல்கள், ஜெனிவாக் கூட்டங்கள் எல்லாமே தமிழ் மக்களுக்கு மங்கலான பாதைகளையே காட்டி நிற்கின்றன.

எமது வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் கூட பல பல விதங்களில் பிரிந்தே காணப்படுகின்றனர். அரசியல் ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக இன்னும் பல வழிகளில் எமது மக்கள் பிரிந்தே நிற்கின்றார்கள். மேலும் அண்மைய வெள்ளம் புகுந்து வெள்ளாமை அழிவடைந்த நிலையில் பல இடங்களில் எம் மக்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறான சூழலிலே தான் ஆதவன் தைத்திருநாளில் மேலெழ உள்ளான்.

இதுவரை அவன் செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி செலுத்தும் இந் நன்நாளில் இனி வருங் காலத்தில் மங்கலான பாதைகளுக்கு ஒளியூட்ட அவனிடம் இறைஞ்சுவோமாக. சூரியன் பாற்பட்டதே இவ்வுலகம். அவன் ஒளிக்கதிர்கள் எம்மேல் படா தொழிந்தால் எமக்கு வாழ்வில்லை, வளமில்லை, வாழ்க்கையுமில்லை. அவன் ஒளிபட்டால் வாழ்வு துலங்கும்; வளம் பிறக்கும்; வாழ்க்கை சிறக்கும்.

சிறந்ததொரு வாழ்க்கையை எம் அனைவருக்கும் இவ்வாண்டில் வழங்கிட அந்த ஆதவனை ஆர்வத்துடன் இந்த நன்நாளில் வேண்டுவோமாக. தமிழர்கள் அனைவருக்கும் ஒருமித்த ஒன்றுபட்ட வாழ்க்கையைக் கொடுத்து நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அவர்களுக்கு அவன் அருள்வானாக. 

ஒற்றுமையே எமது பலம். ஒன்றுபட்ட எமது செயல்கள் வளந்தரும்; வாழ்வு தரும். இந் நன் நாளில் எல்லோரும் இன்புற்றிருக்க ஆதவன் ஆசி வழங்குவானாக என்றுள்ளது. 
Previous Post Next Post