ஊடகப் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்! - Yarl Thinakkural

ஊடகப் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்!

ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்யப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் சேர்ந்து யாழில் போராட்டம் ஒன்றினை நடத்தினர்.

யாழ்.பிரதான வீதி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபிக்கு முன்பாகவே இன்று சனிக்கிழமை இவ்வார்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 ஆவது நினைவு தினத்திற்காக குறித்த நினைவு தூபியின் முன் ஒன்று கூடிய ஊடகவியலாளர்களினாலேயே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்திவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் பணிபுரியும் ஊடகவியலார்களும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும், கொழும்பில் பணியாற்றும் ஊடகவியாளர்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமது கோரிக்கையினை வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட 45 ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடக சுந்திரத்தை உறுதிப்படுத்து, காலத்தை வீனடிக்காதே, தாக்காதே தாக்காதே ஊடகத்தை தாக்காதே, ஊடகத்தை அடக்காதே என்ற தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் தாங்கியவாறு அவர்கள் தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலங்களாக நடைபெற்ற இப் போராட்டம் எந்தவிதமான இடையூகளும் இன்றி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post