-யாழில் வழிப்பறி கொள்ளை- நகைக்கடை உரிமையாளருக்கு சிறை! - Yarl Thinakkural

-யாழில் வழிப்பறி கொள்ளை- நகைக்கடை உரிமையாளருக்கு சிறை!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

அத்தனை வழக்குகளிலும் சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்குட்படுத்த உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அவரிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகைக் கடை உரிமையாளரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாள்களில் வழிப்பறிகளும் நகைக் கொள்ளைகளும் இடம்பெற்று வந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர். 

இந்நிலையில்  நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒருவரையும் அந்த நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற ஒருவரையும் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து  மோட்டார் சைக்கிள் ஒன்றும்  களவாடப்பட்ட - கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகளும் மீட்கப்பட்டன. 

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று முற்படுத்தினர். 11 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தனித் தனியே வழக்குகளை பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.

நகைக் கடை உரிமையாளர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ், பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்தார். எனினும் வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகைக் கடை உரிமையாளருக்கு பிணை வழங்க மறுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடுத்த தவணையின் போது அடையாள அணிவகுப்புக்குட்படுத்த முறைப்பாட்டாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறும் நீதிமன்று உத்தரவிட்டது.
Previous Post Next Post