யாழில் மீட்ட 7,500 லீற்றர் எதனோலை அழிக்க உத்தரவு! - Yarl Thinakkural

யாழில் மீட்ட 7,500 லீற்றர் எதனோலை அழிக்க உத்தரவு!

சுன்னாகம், ஏழாலைப் பகுதியில் சாராயத்துடன் கலப்படும் செய்யும் நோக்குடன் பதுக்கிவைக்கப்பட்டிருந்து சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எதனோல் (தூய மதுசாரம்) கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசாவின் உத்தரவில் இன்று புதன் கிழமை அழிக்கப்பட்டது.

ஏழாலைப் பகுதியில் நீண்டகாலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 371 கான்களில் நிரப்பிவைக்கப்பட்டிருந்த சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எதனோல் கடந்த 24 ஆம் திகதி சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டது.

மல்லாகம் இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொதே சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பதுக்கிவைக்கப்ட்டிருந்த நிலையில் இந்த எதனோல் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரிலுள்ள மதுபான சாலை உரிமையாளரால் யாழ்ப்பாண மதுபான சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் பனம் சாரயத்தில் கூடியளவும் எதனோல் கலப்படம் செய்யப்பட்டு பல கோடி ரூபா இலாபம் பெறப்படுவதாகக் கண்டறியப்பட்டது. இந்த கலப்படம் செய்யும் சட்டவிரோத நடவடிக்கை கடந்த 2 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திக்கம் வடிசாலையில் வைத்து இரவு வேளைகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பாரவூர்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த காணியின் பாராமரிப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற எல்லையில் இடம்பெற்ற போதும் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுன்னாகம் மதுபான சாலை உரிமையாளருக்கும் இடையே நெருங்கி தொடர்புள்ளது என்று தெரிவித்து கிளிநொச்சியிலுள்ள வடமாகாண மதுவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் சந்தேகநபர்கள் கையளிக்கப்பட்டனர்.

அத்துடன், எதனோல் சான்றுப்பொருளும் அங்கு கையளிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் மா. கணேசராசா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு நாளை 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எதனோல் அடங்கிய சுமார் 371 கொள்கலன்கள் இன்று புதன்கிழமை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக பதிவாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் உமையாள்புரம் பகுதியிலுள்ள பிரதேச சபையின் கழிவகற்றல் காணியில் ஊற்றி அழிக்கப்பட்டன.
Previous Post Next Post