5 வருடத்தில் சிறந்த செயற்பாடு கீதம் உருவாக்கமே! -பிரதம செயலாளர் பத்திநாதன்- - Yarl Thinakkural

5 வருடத்தில் சிறந்த செயற்பாடு கீதம் உருவாக்கமே! -பிரதம செயலாளர் பத்திநாதன்-

முதலாவது வடக்கு மாகாண சபையின் 5 வருட ஆட்சிக் காலத்தில் மாகாண சபை செய்த மிகச் சிறந்த விடயம் மாகாணத்துக்கான கீதம் இயற்றியதே என வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணக் கீதம் இயற்றிய கலைஞர்களைக் கௌரவிக்கும் நீகழ்வு மாகாண பேரவைச் செயலக பொது மண்டபத்தில் நேற்று பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞர்களைக் கௌரவித்து உரையாற்றும் போதே பிரதம செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையில் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டு முப்பது வருடங்களைக் கடந்திருக்கின்றது. அதே நேரம் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு ஆட்சிக் காலமும் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்திருக்கின்றது.

இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் மாகாண சபையின் செயற்பாடுகளில் மிகச் சிறந்த செயற்பாடாக மாகாணத்திற்கான கீதம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சபையின் இறுதிக் கட்டத்தில் கீதம் இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தாலும் சபையின் மிகப் பெரிய
பெறுபேறுகளாக இந்தக் கீதம் இயற்றியதைக் குறிப்பிடலாம். ஆகவே மாகாணக் கீதம் இயற்றிய
அனைவருக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதுவொரு நல்லதோர் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும். மாகாணத்துக்கான இந்தக் கீதத்தை சபையின் அவைத் தலைவர் எம்மிடம் அனுப்பி வைத்தால் அதனை நாங்கள் மாகாணத் திணைக்களங்கள் அனைத்திற்கும் அனுப்பி வைப்போம்.

அதனூடாக இக் கீதம் மக்களிடம் சென்றடையும். அவ்வாறு மக்களிடத்தே சென்றடைகின்ற போது தான் மாகாணத்திற்கும் இதனை இயற்றியவர்களுக்கும் இதற்காக உழைத்தவர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தக்; கூடியதாக இருக்கும்.

அத்தோடு இந்தக் கீதம் மாகாணத் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும் ஒலிக்கவிடப்படும். குறிப்பாக மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தேசியக் கொடி ஏற்றப்படும் போது தேசிய கீதம் இசைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து மாகாணக் கொடி ஏற்றப்படுகின்ற போதுஆ மாகாணக் கீதமும் இசைக்கப்படும்.
ஆகவே நல்ல முயற்சியை சிறந்த முறையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இதே வேளை மாகாண சபையின் இறுதிக் கட்ட காலங்களில் சபையின் அமைச்சரவை பல மாதங்களாக கூட்டப்படாமல் இருந்தது. ஆனாலும் அவைத் தலைவரின் முயற்சியால் சபையின் செயற்பாடுகள் எவையும் தடையின்றி தொடர்ந்தும் செயற்பட்டிருந்தாகவும் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post