வலி.வடக்கில் 39 ஏக்கர் விடுவிப்பு! - Yarl Thinakkural

வலி.வடக்கில் 39 ஏக்கர் விடுவிப்பு!

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 39 ஏக்கர் காணிகள் இன்று செவ்வாய் கிழமை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மேற்படி காணிகளே மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் விடுவிப்புக்கான அறிவிப்பினை நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார்.

இதன்படி நேற்று வலி.வடக்கு ஜே.249 தையிட்டி வடக்கு, ஜே.250 தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் 19 ஏக்கர் காணி விடுவிப்புக்கான சான்றிதழை காங்கேசன்துறை இராணுவ பொறுப்பதிகாரி வலி.வடக்கு பிரதேச செயலரிடம் கையளித்தார்.

இருப்பினும் ஒட்டகப் புலத்தில் விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணிக்கான சான்றிதழ்கள் பிரதேச செயலரிடம் இராணுவ தரப்பால் கையளிக்கப்படவில்லை.

இருந்த போதும் விடுவிப்புக்கான அறிவித்தல் விடப்படட ஒட்டகப்புலப் பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post