கிராமசேவகர் இடமாற்றத்திற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்! - Yarl Thinakkural

கிராமசேவகர் இடமாற்றத்திற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!

யாழ்.புன்னாலைக்கட்டுவனில் அரசியல் பழிவாங்கல் காரணமாக கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் குற்றம் சுமத்தி அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கிராம சேவகருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு அப் பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் அந்த இடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வலியுறுத்தியும் குறித்த கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அப் பகுதி மக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது அரசியல் பழிவாங்கல் காரணமாகவே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள தாகம் தெரிவித்துள்ள மக்கள் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்து தமக்கு முன்னர் இருந்த கிராம சேவகரையே மீள நியமிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் பிரதேச செயலர் மற்றும் அரச அதிபர் ஆகியோருக்கும் அப் பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.


Previous Post Next Post