மரண தண்டனை நிறைவேற்றம்! -மைத்திரியின் அதிரடி அறிவிப்பு- - Yarl Thinakkural

மரண தண்டனை நிறைவேற்றம்! -மைத்திரியின் அதிரடி அறிவிப்பு-

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நபர்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தாமதமாகியுள்ளது.

இதுதொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல் மற்றும் குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட திருத்தங்கள் பற்றி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்க இடமளிக்கக்கூடாது என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கு முடியாத வகையில் அந்த சட்டங்களை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குற்றங்களை குறைப்பதுடன் தொடர்புடைய சட்ட வரைவுகள், மது வரி கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது உறுப்புரைகள் திருத்தம், நச்சு போதைப் பொருள் கட்டளைச் சட்ட திருத்தம், சிறைச்சாலைகள் பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப் படையின் உதவியை பெற்றுக்கொள்ளல், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
Previous Post Next Post