சுன்னாகத்தில் ஜிம் நிலையம் அடித்துடைப்பு! - Yarl Thinakkural

சுன்னாகத்தில் ஜிம் நிலையம் அடித்துடைப்பு!

யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள உடல் பயிற்சி நிலையம் (ஜிம்) இனந்தெரியாத கும்பலால் இன்று திங்கட்கிழமை மாலை அடித்து உடைத்தும் பெற்றோள் குண்டுத்தாக்குதல் நடத்தியும் நாசம் செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக செயற்படும் குறித்த பகுதியில் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்காக சுன்னாகம் பொலிஸார் செய்திருக்கும் சதி வேலையாக இத்தாக்குதல் சம்பவம் இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சுன்னாகம் காங்கேசன் துறை வீதிக்கு அருகில் உள்ள குறித்த உடல் பயிற்சி நிலையத்திற்கு (ஜிம்) மோட்டார் சைக்கிலில் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய இனந்தெரியாத கும்பல் மிக வேகமாக உள்நுழைந்து அங்கிருந்த கண்ணாடி மற்றும் வேறு சில பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

அங்கு நின்று நாசவேலை புரிந்த கும்பல் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன் பின்னர் அங்கு வந்த அயலவர்கள் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் உள்ளவர்களும், தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தகவல் தருகையில்:-

சுன்னாகம் பொலிஸார் அடைத்துடைக்கப்பட்ட உடல் பயிற்சி நிலையத்திற்கு (ஜிம்) அருகில் உள்ள தனியார் காணியை சுவீகரித்து அதில் பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்கள்.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டும், குடிமனைகளுக்குள் பொலிஸ் நிலையம் வேண்டாம் என்று கோரி இங்குள்ள மக்கள் இன்று உடுவில் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சிவில் உடையில் அங்கு நின்ற பொலிஸார் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக பொலிஸார் தமக்கு தருமாறு கோரும் காணிக்கு அருகில் உள்ள உடல் பயிற்சி நிலையம் (ஜிம்) அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் சம்பவம் இன்று பொலிஸாருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறும்தும் செயலாகவே இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களில் சுன்னாகம் பொலிஸார் கொலை, சித்திரவதைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றது.

எனவே பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட சதி வேலையாக இது இருக்கும் என்று நம்புகின்றோம் என்றனர்.Previous Post Next Post