-பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு- தாயைக் குத்திக்கொன்ற மகள்! - Yarl Thinakkural

-பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு- தாயைக் குத்திக்கொன்ற மகள்!

தமிழகத்தின், திருவள்ளூர் அருகே பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த மகள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

நண்பர்களை ஏவிய காதலனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8வது தெருவை சேர்ந்தவர் திருமுருகன் நாதன்(55).

இவரது மனைவி பானுமதி(50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி(24), தேவிப்பிரியா(19) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில், தேவிப்பிரியா தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், தேவிப்பிரியாவுக்கு பேஸ்புக் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்புவனம் பகுதியை சேர்ந்த விவேக்(18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்த பேஸ்புக் காதலுக்கு தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனால், தேவிப்பிரியா தனது பேஸ்புக் காதலன் விவேக்கை தொடர்புகொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு செல்போனில் தொடர்பு கொண்டார்.

இதையடுத்து, விவேக், தனது நண்பர்களான திருவிடைமருதூர் அடுத்த கோட்டூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்(18), திருபுவனம் கன்னித்தோப்பு தெருவை சேர்ந்த விக்னேஷ்(18) ஆகியோரை அணுகினார்.

அவர்களிடம் தனது பேஸ்புக் காதலியை அழைத்து வருமாறு கூறி, நேற்று நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னைக்கு விவேக் அனுப்பி வைத்தார்.

சென்னைக்கு வந்த சதீஷ், விக்னேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து நேற்று மாலை புட்லூர் ரயில் நிலையம் வந்தனர்.

அவர்களை தனது வீட்டுக்கு தேவிப்பிரியா அழைத்துவந்து, வீட்டின் வெளியே நிற்குமாறு கூறிவிட்டு, அவர் மட்டும் வீட்டுக்குள் சென்றார்.

தனக்கு தேவையான துணிகளை எடுத்து பையில் வைக்கும்போது, அவரது தாய் பானுமதி பார்த்துவிட்டு, மகளை வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் தடுத்தார்.

இதில், ஆத்திரமடைந்த தேவிப்பிரியா, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் பானுமதியை சரமாரியாக வயிறு, மார்பில் குத்தினார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து, மூவரையும் பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பானுமதியை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

தொடர்ந்து சதீஷ், விக்னேஷ், தேவிப்பிரியா ஆகிய மூவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காதலுக்கு தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனின் நண்பர்கள் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தேவிப்பிரியா தெரிவித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காதலியை, அழைத்து வர நண்பர்களை அனுப்பி விவேக்கை பிடிக்க, தனிப்படை போலீசார் கும்பகோணம் விரைந்துள்ளனர். பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனின் நண்பர்கள் உதவியுடன் பெற்ற மகளே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலுக்கு தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனின் நண்பர்கள் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்ததாக தேவிப்பிரியா தெரிவித்தார்.
Previous Post Next Post