உத்தரவாதம் பெறாமல் மீண்டும் ரணிலை ஆதரிக்குமா? த.தே.கூட்டமைப்பு! - Yarl Thinakkural

உத்தரவாதம் பெறாமல் மீண்டும் ரணிலை ஆதரிக்குமா? த.தே.கூட்டமைப்பு!

ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிப்பதாக ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ள நிலையில், மீண்டும் ஒரு பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சித் ரணிலை ஆதரிக்கும் தீர்மானத்தையும் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு அரசியல் குழப்ப நிலைக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்டோபர் 26 திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளவும் ஆட்சியமைக்க வெளிப்படையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமது ஆதரவைத் தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர்.

ஆனால் இந்த ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதற்காக தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்பு உத்தரவாதம் எதனையும் ஐக்கிய தேசிய முன்னணியிடம் இருந்தோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணிலிடம் இருந்தோ பெற்றுள்ளதா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னிணை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தபோது அதற்கு பிரதியுபகாரமாக சில வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்ததாக அவர்கள் சார்பு ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரப்பப்பட்டன.

குறிப்பாக பெப்ரவரி 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதாக ரணில் எழுத்து மூல உத்தரவாதத்தை கூட்டமைப்புக்கு வழங்கியிருந்ததாக அந்தச் செய்திகள் தெரிவித்தன.

இதனைவிட அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்டவை தொடர்பிலும் உத்தரவாதம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைவிட ஒரு படி மேலே சென்று போர்க்குற்ற விசாரணை தொடர்பிலும் ரணிலிடம் இருந்து உத்தரவாதம் பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த வாக்குறுதிகளையும் ஐக்கிய தேசியக் கட்சி வழங்கவில்லை. கூட்டமைப்போடு ஒப்பந்தங்கள் எதனையும் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே ரணிலை பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இது தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எழுத்துமூல உத்தரவாதம் இன்றி ஐக்கிய தேசிய முன்னணியை தாம் ஆதரிக்க மாட்டோம் என கூட்டமைப்பு அங்;கத்துவக் கட்சியான ரெலோ ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை உத்தரவாதம் இன்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கப் போகிறதா? என்ற கேள்வியும் பல்வேறு தரப்புக்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.
Previous Post Next Post