ரணிலின் எம்.பி. பதவியை பறிக்கக் கோரி மனு! - Yarl Thinakkural

ரணிலின் எம்.பி. பதவியை பறிக்கக் கோரி மனு!

தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து கொண்டு அரச நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி யாதுரிமை எழுத்தானை உத்தரவு பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிக்கான பெண்கள் அமைப்பின் துணைத் தலைவர் ஷேமிலா கோனவலவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் உட்பட நால்வரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரச நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்க அவருக்கு அனுமதியில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரர் எனத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும், குறித்த நிறுவனத்தின் கீழ் உள்ள தனியார் நிறுவனத்தின் ஊடாக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் காசோலைகள் அச்சிடப்படுகின்றன எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எனவே, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரராக கடமையாற்றி இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் ஒப்பந்த அடிப்படையில் வியாபாரத்தில் ஈடுபட்டதால் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post