உயிர் இருக்கும்வரை ரணிலைப் பிரதமராக்கமாட்டேன்: மைத்திரி விடாப்பிடி! - Yarl Thinakkural

உயிர் இருக்கும்வரை ரணிலைப் பிரதமராக்கமாட்டேன்: மைத்திரி விடாப்பிடி!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று தீர்மானம் நிறைவேற்றினாலும் அல்லது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு நீதிமன்றத்துக்கு மனுவைச் சமர்ப்பித்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நான் நியமிக்கமாட்டேன். இது உறுதி.

இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் இன்றிரவு நேரடியாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ரணிலைப் பிரதமராக்க வேண்டுமென்றால் என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுங்கள். அல்லது என்னைக் கொலை செய்யுங்கள். எனது பதவி, எனது உயிர் இருக்கும்வரை ரணிலைப் பிரதமர் பதவியில் மீண்டும் அமர்த்துவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் எனவும் ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று மாலை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை அடியோடு நிராகரித்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. இனித்தான் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எனினும், தற்போதைய அரசுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் புதிய அரசை உடன் அமைக்கவேண்டும். எனவே, நாளை ஒரு முடிவுக்கு வருவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணியிடம் பெரும்பான்மைப் பலம் இருந்தால் புதிய அரசை அமைக்க நான் ஒத்துழைப்பு வழங்குவேன். ஆனால், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு நபரைத் பரிந்துரையுங்கள்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியுடன் இன்றிரவு நடைபெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவடைந்ததால் அங்கிருந்து கடும் சீற்றத்துடன் வெளியேறிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அலரிமாளிகைக்கு நேரில் சென்றனர். ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரியின் இந்த விடாப்படியால் கொழும்பு அரசியல் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது.
Previous Post Next Post