செம்மலையில் புத்தர் சிலை! -விசாரணை நடத்தப் பணிப்பு- - Yarl Thinakkural

செம்மலையில் புத்தர் சிலை! -விசாரணை நடத்தப் பணிப்பு-

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவிப் பிள்ளையார் ஆலயத்தில் பலவந்தமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு வடஇகிழக்கு அரச தலைவர் செயலணியால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் செயலணியின் கூட்டம் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசாஇ புத்தர் சிலை விவகாரத்தை எழுப்பியிருந்தார்.

2016ஆம் ஆண்டு வரையில் நீராவிப் பிள்ளையார் ஆலயப் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அந்தப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. பிக்கு ஒருவர் அங்கு வழிபாடுகள் நடத்தி வந்தார்.

இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியபோதும் புத்தர் சிலை அகற்றப்படவில்லை. நீராவிப் பிள்ளையார் ஆலயத்தில் தற்போது மிகப் பெரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பௌத்தர்களே வசிக்காத பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இத்தகைய செயற்பாடுகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று அரச தலைவர் செயலணிக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு அரச தலைவர் செயலணியால் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்தில் கடி­ம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் மாவட்டச் செயலர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரை நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
Previous Post Next Post