ஆட்சியை ஒப்படையுங்கள்! -மைத்திரியிடம் ராஜித வேண்டுகோள்- - Yarl Thinakkural

ஆட்சியை ஒப்படையுங்கள்! -மைத்திரியிடம் ராஜித வேண்டுகோள்-

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட்டு – அவமானப்பட்டுத் தலைகுனிய வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாட்டில் இன்று பிரதமரும் இல்லை; அமைச்சரவையும் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். ஜனாதிபதி இதற்குத் தடையாக இருக்கின்றார். எனவே, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அலரி மாளிகையில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்துப் பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும்.

நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் வழங்கினால் தான் பதவி விலக வேண்டி வருமென ஜனாதிபதி எங்களிடம் சொன்னார். அது அவரின் இஷ்டம். பதவி விலகவேண்டுமெனில் அவர் உடன் பதவி விலகட்டும். அந்த நிலைமையை அவரே உருவாக்கிவிட்டார்.

ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சியால் நாடு இன்று மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், அரசை எப்படி எடுப்பது என்பது எங்களுக்குத் தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ளாமல் ஆட்சியை எங்களிடம் ஜனாதிபதி ஒப்படைக்க வேண்டும் என்றார்.
Previous Post Next Post