பொட்டு அம்மானை போட்டு விட்டோம்! -கட்டளைத் தளபதி கமால் குணரத்ன- - Yarl Thinakkural

பொட்டு அம்மானை போட்டு விட்டோம்! -கட்டளைத் தளபதி கமால் குணரத்ன-

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மான் இறுதிப்போரில் கொல்லப்பட்டுவிட்டார்.

இவ்வாறு இறுதிக்கட்டப்போரின்போது 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட கமால் குணரத்ன தெரிவித்தார்.

இறுதிக்கப்பட்டப்போர் தொடர்பில் இவர் புத்தகமொன்றையும் எழுதியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான கமால் குணரட்ன, தற்போது ‘ஏலிய’ அமைப்பின் நட்சத்திர பேச்சாளராகவும் வலம்வருகிறார்.

மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அதுதொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இக்கொலை தொடர்பில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். போர்காலத்தில் அவர் பொட்டு அம்மாவின் விசுவாசியாக செயற்பட்டுள்ளார்.

இதனால், பொட்டு அம்மான் நோர்வேயில் உயிருடன் உள்ளார் என்று கருத்து வெளியிடப்பட்டது. சமூகவலைத்தலங்களில் அது காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையிலேயே இராணுவத்தின் உயர்மட்ட தளபதி ஒருவரால் மேற்படி கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கட்டப் போரில் நந்திக்கடல் பகுதியில் ஏராளமான சடலங்கள் புதைந்து கிடந்தன. இவற்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரின் சடலங்களும் இருந்தன.

அதேபோன்று நந்திக்கடல் பரந்த பிரதேசமாகும். இறுதிக்கட்டப் போரில் பல உடல் நீருக்குள்ளும், சேற்றுக்குள்ளும் புதைந்து கிடந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற உடலும் மீட்கப்பட்டது.

இறுதிக் கட்ட நந்திக்கடல் போரில் எந்தவொரு தலைவரும் தப்பிக்க வாய்ப்பில்லை.

விடுதலை புலிகள் இயக்கத்தின் கிழக்கு தளபதியாக செயற்பட்ட கருணா அரசியல் பிரவேசத்துக்கு வந்ததன் பின்னர் போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றார். இது அவரது அரசியல் நோக்கத்தினை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.

அவ்வாறு பொட்டு அம்மான் உயிருடன் இருப்பாராயின் எட்டு வருடங்கள் தலைமறைவாகி இருக்க வேண்டிய தேவை கிடையாது.

53ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக நான் விளங்கினேன். நாம் நந்திக்கடலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை மும்முரமாக முன்னெடுத்தோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரற்ற உடலை கைப்பற்றியதும் எனது படையணியே ஆகும்.

ஆகவே புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார் என்ற கருத்து முற்றிலும் பொய்யாகும் என்றார்.
Previous Post Next Post