பொலிஸ் சுட்டுக்கொலை! மாவீரர் தினத்திற்கு தடையே காரணம் - Yarl Thinakkural

பொலிஸ் சுட்டுக்கொலை! மாவீரர் தினத்திற்கு தடையே காரணம்

மாவீரர் தினம் நினைவுகூரப்படுவதை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாலேயே, அவர்களை பழிதீர்க்கும் நோக்கிலும் பதிலடிகொடுக்கும் வகையிலும் மட்டக்களப்பில் இரண்டு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.


கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பிரதான பத்திரிகையொன்றில் செய்திவெளிவந்துள்ளது.

2009 மே 19 ஆம் திகதியிலிருந்து 2015 ஜனவரி 8 ஆம்திகதிவரை வடக்கு, கிழக்கில் பட்டாசு கொளுத்துவதற்கே மக்கள் அஞ்சினார்கள். போரினால் ஏற்பட்ட வலிகளை நேரில் உணர்ந்ததாலேயே அவர்கள் அமைதியாக வாழவிரும்பினர். எனினும், 2015 ஜனவரி 9 ஆம் திகதிக்கு பிறகு பயங்கரவாதம் தலைதூக்க ஆரம்பித்தது.

வடக்கில் ஆவாகுழு முளைத்தது. தமிழ் வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். புலிகளை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. வடக்கில் தேசியக்கொடியை ஏற்றமுடியாது என மாகாண அமைச்சரொருவர் அறிவிப்பு விடுத்தார். புலிகள் மீண்டும் வரவேண்டும் என விஜயகலா எம்.பி. சூளுரைத்தார்.

அவர்கோரிய புலிகளே தற்போதுவந்துள்ளனர். மாவீரர் தினம் நினைவுகூரப்படுவதை இம்முறை பொலிஸார் தடுத்தனர். அதற்கான பழிவாங்கல் நடவடிக்கையாகவே புலி ஆதரவாளர்களால் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியே, புலிகள் அமைப்பின் தந்தை. புலிகள் உருவாவதற்கான களத்தை அக்கட்சியே அமைத்துக்கொடுத்தது. யாழ். பல்கலைக்கழகம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களாலேயே புலிகள் உருவாகினர். பிரபாகரனால் எழுதம்மூலம் பெறமுடியாமல்போனதை, பேனைமூலம் பெறுவதற்கு சுமந்திரன் முற்படுகின்றார் என்றார்.

Previous Post Next Post