6 இலட்சம் O/L மாணவர்களுக்கும் எச்சரிக்கை! - Yarl Thinakkural

6 இலட்சம் O/L மாணவர்களுக்கும் எச்சரிக்கை!

நாளை திங்கட்கிழமை முதல்  ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை,  எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இக்காலப் பகுதிக்குள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள சகல பரீட்சார்த்திகளும் மிகவும் பொறுப்புடனும், புத்திசாதுர்யத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என,  இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன்பிரகாரம், இப்பரீட்சைக்குத்  தோற்றும் பரீட்சார்த்திகள்,  பரீட்சை நிலையங்களுக்குள் கணிப்பான்கள், கையடக்கத்  தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் உபயோகிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன்,  அவற்றைப்  பரீட்சை நிலையத்தினுள் எடுத்து வருவது  தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும்,  பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, பரீட்சை நிலையங்களில் இவ்விதம் நடந்து கொள்ளும் பரீட்சார்த்திகள் குறித்து, விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும், இச்சட்ட திட்டங்களை மீறுவோர்க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பரீட்சைகள் திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்முறை இடம்பெறும்  கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப்  பரீட்சையில்,  நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத்  தோற்றவுள்ள நிலையில்,  இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலைகள் ஊடாக இப் பரீட்சைக்குத்  தோற்றவுள்ளனர்.

இதேவேளை, இப்பரீட்சைக்காக,  நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  இலங்கைப்  பரீட்சைகள்  திணைக்களம் மேலும்
தெரிவித்துள்ளது.
Previous Post Next Post