கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ‘அக்னி-5’! ஏவுகணை சோதனை வெற்றி! - Yarl Thinakkural

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ‘அக்னி-5’! ஏவுகணை சோதனை வெற்றி!

பெரும் ஆபத்தை உண்டாக்கும் அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில்  இருந்து இன்று பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் ‘அக்னி–5’ பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஆறுமுறை நடத்தப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாகவே அமைந்தது நினைவிருக்கலாம்.
Previous Post Next Post