ரணிலின் ஆட்சிக்கு பச்சைக்கொடி! -2 நாளில் புதிய அமைச்சரவை- - Yarl Thinakkural

ரணிலின் ஆட்சிக்கு பச்சைக்கொடி! -2 நாளில் புதிய அமைச்சரவை-

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும்,  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற அரசாங்கத்தை உருவாக்கி தொடருவதற்கு அவர் அனுமதிப்பார் என்றும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெளிவாகக் கூறினார்.பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கும் தரப்பை, அரசாங்கமாக தொடர்ந்து செயற்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணையாது என்று வலியுறுத்திய ஜனாதிபதி,  எனினும், ஐதேக அரசாங்கத்தில் இணைய முடிவு செய்யும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக  எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி  அனுமதிக்கமாட்டார் என்று சில தனிநபர்கள் ஊடகங்களுக்கு கூறியது பொய்யான அறிக்கைகளாகும்.

நாட்டை மேலும், நெருக்கடிக்குள் தள்ளிவிட அனுமதிப்பதில்லை என்று பிடிவாதமாக உள்ளார். அதனை அவர் தெளிவாகவும் பொறுப்புடனும் கூறினார்” என்றும் அதிபர் ஊடகப் பிரிவின் மூத்த ஆலோசகர் ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியதாக, மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவை இன்னும் 48 மணிநேரத்துக்குள் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Previous Post Next Post