-வசீம் தாஜூதீன் படுகொலை- கொலையாளிகளை பிடிக்க நீதிமன்று உத்தரவு! - Yarl Thinakkural

-வசீம் தாஜூதீன் படுகொலை- கொலையாளிகளை பிடிக்க நீதிமன்று உத்தரவு!

திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய உண்மையான சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமாரகே சி.ஐ.டியினருக்கு இன்று உத்தரவிட்டார்.


வசீம் தாஜூதீன் வாகன விபத்தால் உயிரிழக்கவில்லை .அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும்   நீதவான் சுட்டிக்காட்டினார்.

குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுமித் தம்மிக்க பெரேரா மற்றும் கொழும்பு முன்னாள் தலைமை சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கொலையுடன் தொடர்புடைய உண்மையான சந்தேகநபர்கள் யார் என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் கேட்டறிந்துகொண்ட மேலதிக நீதவான், அவர்களைக் கைது செய்து மன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பில் இதுவரை ஆயிரத்து 200 ​பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டிகே தெரிவித்தார்.

22 இலட்சத்திற்கும் அதிக தொலைபேசி உரையாடல்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மன்றில் குறிப்பிட்டார்.
Previous Post Next Post