பதவியிலிருந்து விலகுங்கள்! –மஹிந்தவிடம் சு.க. எம்.பிக்கள் கோரிக்கை- - Yarl Thinakkural

பதவியிலிருந்து விலகுங்கள்! –மஹிந்தவிடம் சு.க. எம்.பிக்கள் கோரிக்கை-

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தக் கோரிக்கையை விடுத்தனர் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தொந்தரவு கொடுக்காமல், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு, சு.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவிடம் கோரியுள்ளனர்.

எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அளிக்கப்படும் வரை, பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால், தன்னைப் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கூறும்படியும் அவர் கூறியுள்ளார்.

பதவியில் நீடிப்பதால், மைத்திரிபால சிறிசேனவை நாட்டு மக்கள் விமர்சிப்பார்கள் என்றும், தன்னை விமர்சிக்க மாட்டார்கள் என்றும் அவர், தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும், பாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டால் தான் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Previous Post Next Post