நாளையும் புறக்கணிப்பு -மஹிந்த அணி- - Yarl Thinakkural

நாளையும் புறக்கணிப்பு -மஹிந்த அணி-

நாளை வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் மேற்படி தகவலை வெளியிட்டனர்.


அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, நிமல்சிறிபாலடி சில்வா, விமல்வீரவன்ஸ,சுசில் பிரேமஜயந்த,மஹிந்த சமரசிங்க ஆகியோர் செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

சபாநாயகர் கருஜயசூரிய பக்கச்சார்பாகவே செயற்பட்டுவருகின்றார். அவரது உண்மை முகம் என்னவென்பது தற்போது அம்பலமாகியுள்ளது. சட்டவிரோதமாக தன்னிச்சையாக அவரால் நடத்தப்படும் சபை அமர்வில்  பங்கேற்கமாட்டோம். இது தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தையும் எமது தலைவர்கள் கையளித்தனர்.

நாடாளுமன்றத்தை சிறிகொத்த கட்சிதலைமையகம்போன்றே சபாநாயகர் நடத்துகிறார். எனவே, கடந்த 14 ஆம் திகதி முதல் நிறைவேற்றப்பட்டுள்ள எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது. நிலையியற்கட்டளைக்கும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் புறம்பாகவே  அவை நிறைவேற்றப்பட்டுள்ளதால் தீர்மானங்களை ஏற்கமாட்டோம்.

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம். அரசியல் குழப்பத்துக்கு மக்கள் வழங்கும் ஆணையிலேயே தீர்வு தங்கியுள்ளது என்றும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
Previous Post Next Post