மட்டக்களப்பில் பொலிஸ் சுட்டுக்கொலை – பின்னணியில் கருணா அம்மான்! ஐ.தே.க. பரபரப்பு தகவல்!! - Yarl Thinakkural

மட்டக்களப்பில் பொலிஸ் சுட்டுக்கொலை – பின்னணியில் கருணா அம்மான்! ஐ.தே.க. பரபரப்பு தகவல்!!

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் கருணா அம்மானும் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான நளின் பண்டார வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

மட்டக்களப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும். நாட்டில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்கிவிட்டதா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும். ஜனாதிபதியும் இதுவிடயத்தில் தலையிடவேண்டும். தற்போது பொலிஸ்மா அதிபர் பதவியில் இருக்கிறதா அல்லது அவர் நீக்கப்பட்டுவிட்டாரா என்ற கேள்வியும் எழுகின்றது.

சுதந்திரக்கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான கருணா அம்மான், டுவிட்டர் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணா அம்மான் என்றால் யாரென கேட்டு தெரிந்துக்கொள்ளும்படி ஐ.தே.க. உறுப்பினர்களை அவர் மிரட்டியுள்ளார்.

எனவே, மேற்படி கொலை சம்பவத்துக்கும், கருணாவுக்குமிடையே தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். எனவே, விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் நளின் பண்டார வலியுறுத்தினார்.
Previous Post Next Post