தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற மூன்று நாள் காலக்கெடு - Yarl Thinakkural

தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற மூன்று நாள் காலக்கெடு

வடமராட்சி கிழக்கு- மருதங்கேணியில் இருந்து தென்பகுதி மீனவர்களை 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற்ற வேண்டும். 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற்றா விட்டால் அடுத்த கட்டம் பாரியளவில் மக்கள் போராட்டங்களை நடத்துவதெனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை  முற்றுகையிட்டு போராடுவதெனவும் தீர்மானிக்கப்படடுள்ளது.
மருதங்கேணி பகுதியில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் சுமார் 1500இற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்கியிருந்து கடற்றொழில் செய்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரி மருதங்கேணி மக்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் நிலையில், மேற்படி மீனவர்களை வெளியேற்றுவது குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று காலை 7.30மணிக்கு மருதங்கேணி பிரதேச செயலர் தலமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எஸ்.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தென்பகுதி மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றவேண்டும் என உறுதியாக கூறினர். இதனடிப்படையில் மேற்படி தென்பகுதி மீனவர்களை 5ஆம் திகதிக்கு முன்னர் மருதங்கேணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதெனவும், 5ஆம் திகதிக்குள் தகுந்த பதில் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மக்களை ஒன்றினைத்து பாரியளவில் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதெனவும்,

அதற்கும் ஒரு சில நாட்களில் பதில் கிடைக்காவிட்டால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மற்றும் யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து மக்களை ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் தலமையில் யாழ்.நகரில் உள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு பாரியளவிலான முற்றுகை போராட்டம் ஒன்றை நடத்துவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தினை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

மேலும் அடாத்தாக தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்களை ஒரு மாத காலத்திற்குள் மருதங்கேணியிலிருந்து வெளியேற வேண்டும் என மருதங்கேணி பிரதேச செயலர் தனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post