பெண் கழுத்தறுத்துக் கொலை -மானிப்பாயில் கொடூரம்- - Yarl Thinakkural

பெண் கழுத்தறுத்துக் கொலை -மானிப்பாயில் கொடூரம்-


மானிப்பாய் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

பிச்சை கேட்டு வந்த ஒருவரே இக்கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரியவருகிறது.

மானிப்பாய் - சங்கப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேசி (வயது 60) என்பவரே கொலை செய்யப்பட்டவர் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் மானிப்பாய்  - கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவரை பராமரித்து வருகிறார். இந்த வீட்டில் வைத்தே அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வீட்டுக்கு நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் அங்கு பிச்சை கேட்டு ஒருவர் வந்துள்ளார். அவருக்கு சிறு தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அவ்வீட்டில் இருந்தவர்களிடம் தண்ணீர் தருமாறு கோரி பிச்சை கேட்டு வந்தவர் அங்கேயே நின்றுள்ளார். இந்நிலையில் திடீரென கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தின் பின்னர் இப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஆனைக்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திரிந்த பிச்சை எடுக்கும் ஒருவரைப் பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநோயாளி என்றும், அவர்தான் இக் கொலையைச் செய்திருக்கலாம என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இவ்வாறு கையளிக்கப்பட்ட நபரை தீவிரமாக விசாரித்து வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினார்.


Previous Post Next Post