சிறையில் கதறிய நளினி, முருகன் - Yarl Thinakkural

சிறையில் கதறிய நளினி, முருகன்

ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகிய இருவரும் சனிக்கிழமை நேரில் சந்தித்து கண்ணீருடன் பேசிக் கொண்டதாக சிறைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசு அனுப்பிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை நிராகரித்தார்.

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன், பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவி நளினியை நீதிமன்ற உத்தரவுப்படி 15நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறார்.

இதன்படி முருகனை வேலூர் ஆயுதப்படை தலைமையிலான பொலிஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை காலை பெண்கள் சிறையிலுள்ள நளினியை சந்திக்க அழைத்து சென்றனர். அங்கு காலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை இருவரும் சந்தித்தனர்.

இந்நிலையில் நளினியை சந்தித்த முருகன், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7பேரை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக பேசியுள்ளார்.

அப்போது தங்களுக்கு விடுதலை கிடைக்குமா? அல்லது சிறையிலேயே வாழ்நாள் முடிந்துவிடுமா? என இருவரும் கண்ணீர் வடித்தவாறு கவலையுடன் பேசிக்கொண்டதாக சிறைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post