வடக்கின் அடுத்த முதல்வர் யார்? - Yarl Thinakkural

வடக்கின் அடுத்த முதல்வர் யார்?

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் முதலமைச்சர் வேட்பாளர் ஒருவர் களமிறங்கக் கூடும் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று சூசகமாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நண்பகல் யாழ்.பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் விரைவில் நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் யாரேனும் களமிறக்கப்படுவார்களா? என கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளிக்கும் போதே அவ்வாறான செயற்பாடு இடம்பெறக்கூடும் என முதலமைச்சர் கூறினார். தமிழ் மக்கள் பேரவை சார்பில் நேரடியாக எந்த வேட்பாளரும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாகும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடு களமிறங்குபவர் நீங்களாக இருக்குமா? என்று ஊடகவியலாளர்கள் அடுத்த கேள்வியை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடு யாராவது எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் களமிறங்கக் கூடும். அவர் யார் என்பதை கடவுள் பார்த்துக் கொள்வார் என பதிலளித்தார்.
Previous Post Next Post