சிங்கப்பூரில் பிறந்த நாள் கொண்டாடிய ட்ரம்ப் - Yarl Thinakkural

சிங்கப்பூரில் பிறந்த நாள் கொண்டாடிய ட்ரம்ப்வடகொரிய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவற்காக சிங்கப்பூர் சென்றடைந்துள்ள ட்ரம்ப், இன்று சிங்கப்பூர் பிரதமர் பிரதமர் லீ செய்ன் லூங்கை சந்தித்த போது அவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோர் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பிரதமர் லீ செய்ன் லூங் ட்ரம்பை வரவேற்று அழைத்து சென்றார். ட்ரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ட்ரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார்.

மேலும் ஜனாதிபதி ட்ரம்பின் பிறந்தநாளும் இதன்போது கொண்டாடப்பட்டது.  எதிர்வரும் 14ஆம் திகதி ட்ரம்ப் தனது 72வயதை கொண்டாடுகின்றார். இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியான பாலகிருஷ்ணன், ட்ரம்புக்கு பிறந்த நாள் கேக் ஊட்டும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதற்கிடையே நேற்று வடகொரிய ஜனாதிபதி கிம், சிங்கப்பூர் பிரதமரை தனியாக சந்தித்து பேசியுள்ளார். இரு தலைவர்களும் தனித்தனியாக பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post