ஊர்காவற்றுறை பிரசாரத்துக்கு வந்த போது நடந்தது தெரியுமா? -ஈ.பி.டி.பி, சிவாஜிலிங்கத்துக்கு அச்சுறுத்தல்- - Yarl Thinakkural

ஊர்காவற்றுறை பிரசாரத்துக்கு வந்த போது நடந்தது தெரியுமா? -ஈ.பி.டி.பி, சிவாஜிலிங்கத்துக்கு அச்சுறுத்தல்-

யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை அச்சுறுத்தும் பாணியில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ம.ஜெயகாந்தன் வாக்குவாதப்பட்டுக் கொண்டார்.

குறிப்பாக ஊர்காவற்றுறைக்கு பிரச்சார நடவடிக்கைகளுக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டியே அவர் அச்சுறுத்தும் பாணியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
காணி சுவீகரிப்புத் தொடர்பில் கூட்டத்தில் போசப்பட்ட போது ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ம.ஜெயகாந்தன் தனது சார்பிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவருக்கு அருகில் இருந்தவர் பதில் கூறினார். இதன் போது ஜெயகாந்தன் மடத்தனமாக பேச வேண்டாம் என்றார். ஜெனகாந்தன் மடத்தனமாக பேச வேண்டாம் என்று முதலமைச்சரை பார்த்து பேசியதான எண்ணிய வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கே.விந்தன் ஆகியோர் பெங்கி எழுந்திருந்தனர்.

இதன் போது தான் முதலமைச்சரை பார்த்து பேசவில்லை என்றும், அருகில் இருந்தவருக்கே அதனை கூறியதாக தெரிவித்தார்.
எவ்வாறாக இருந்தாலும் கூட்டத்தில் முறையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் என்று, எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். ஆதற்கு பதிலளித்த ஜெயகாந்தன் நான் முதலமைச்சரை சொல்லவில்லை, நீ மடத்தனமாக பேசாதே என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவாஜிலிங்கம், நீயார் என்றும் தெரியும், ஊர்காவற்றுறையும் எங்களுக்கு தெரியும் என்றார்.

இதற்கு பதிலளித்த ஜெயகாந்தன் ஆம் ஊர்காவற்றுறை உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று அங்கு பிரச்சார நடவடிக்கைக்கு சென்ற போது சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை சாடை காட்டி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post