இலங்கை கடற்படைக்கு எதிரான மனு தள்ளுபடி - Yarl Thinakkural

இலங்கை கடற்படைக்கு எதிரான மனு தள்ளுபடி

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்ல கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் தலைவர் பீட்டர்ராயன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1984ஆம் ஆண்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க கச்சதீவு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

 மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இலங்கைக்கான துணைச் செயலாளர் பினோய் ஜார்ஜ் தாக்கல் செய்த பதில் மனுவில், சர்வதேச நீதிமன்ற சட்டத்தின்படி இரு நாடுகள் ஏற்றுக் கொண்டாலோ அல்லது இரு நாடுகளுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டாலோ சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என்ற ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் யாரும் ஆஜராகாததால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Previous Post Next Post