இராமேஸ்வரத்தில் ரெலோ அமைப்பு பயன்படுத்திய ஆயுதங்கள் மீட்பு - Yarl Thinakkural

இராமேஸ்வரத்தில் ரெலோ அமைப்பு பயன்படுத்திய ஆயுதங்கள் மீட்புதமிழீழ விடுதலைக்காக போராடிய குழுக்களில் ஒன்றான ரெலோ அமைப்பு பயன்படுத்திய ஆயுத குவியல் இராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோனியார்புரத்தில் உள்ள எடிசன் என்பவர் வீட்டின் அருகிலிருந்த கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக குழி தோண்டியுள்ளனர்.

அப்போது குழிக்குள் துருப்பிடித்த நிலையில் இரும்பு பெட்டிகள் தென்பட்டுள்ளன. அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்த போது, அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்துள்ளன. இதையடுத்து தங்கச்சிமடம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் ஆய்வு செய்த போது ஆயுத குவியல் இருப்பது தெரியவந்தது. வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் தனிப்படையின் உதவியுடன் குழி தோண்டப்பட்டது.

இதன்போது 10ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400ரொக்கெட் லாஞ்சர்கள், 15 பாக்ஸ் கையெறி குண்டுகள், 5கண்ணிவெடிகள், கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகளுடன் 4பெட்டிகள் எடுக்கப்பட்டன.
மதுரையிலிருந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தோட்டாக்களையும் வெடி பொருட்களையும் ஆய்வு செய்தனர்.

இங்கு கண்டு எடுக்கப்பட்ட ஆயுதங்களை அப்பகுதியில் வேறொரு இடத்தில் குழி தோண்டி பாதுகாப்பாக பொலிஸார் வைத்துள்ளனர். மேலும் இப்பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம், தங்கச்சிமடம், தண்ணீர் ஊற்று, பனைக்குளம், ஆற்றாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியாவின்  ஆதரவோடு விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது. கடற்கரையை அண்மித்த பகுதிகளில் பல ஆண்டுகளாக ஆயுத பயிற்சி வழங்கப்பட்டது.

கடந்த 1986ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிக்குழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.  அக்காலக்கட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலையில் பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்று விட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா பகுதியில் தமிழ் இயக்கங்கள் பயன்படுத்திய அதி நவீன துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post