மக்கள் பிரச்சினைகளை பேச விடாது தடுத்த அதிகாரி: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் நிலை இது! - Yarl Thinakkural

மக்கள் பிரச்சினைகளை பேச விடாது தடுத்த அதிகாரி: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் நிலை இது!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீவகப் பகுதியில் உள்ள மக்களுடைய அத்தியாவசியப் பிரச்சினைகளை கூறுவதற்கு எழுந்தவரை மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் ஒருவர் பிரச்சினைகளை கூற விடாமல் தடுத்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இணைத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச உத்தியோகஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கூட்டத்தில் தீவகப் பகுதியில் உள்ள வீதிகளின் புணரமைப்பில் உள்ள புறக்கணிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது. இதன் போது வேலணை பிரதேச சபையின் யூ.என்.பி உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்க எழுந்தார்.

எழுந்த அவருக்கு மண்டபத்தில் நின்ற மாவட்டச் செயலக ஊழியரால் அவருக்கு ஒலி வாங்கி (மைக்) வழங்கப்பட்டது. இதன் போது அவ்விடத்திற்கு வந்த யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அவரிடம் கொடுக்கப்பட்ட ஒலி வாங்கியை பறிமுதல் செய்யுமாறு குறித்த ஊழியருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் பிரச்சினையை தெரிவிக்க எழுந்தவரை இருக்கையில் அமரச் செல்லுமாறும் அந்த அதிகாரி ஊழியருக்கு பணித்திருந்தார். இதுமட்டுமல்லாமல் அவருக்கு எச் சந்தர்ப்பத்திலும் ஒலி வாங்கியை கொடுக்க வேண்டாம் என்று கூறினார்.

இருப்பினும் உரத்த குரலில் வேலணைப் பகுதியில் உள்ள வீதிகளின் புணரமைப்பில் காட்டப்படும் அசமந்தப் போக்கு மற்றும் வேண்டுமென்ற புறக்கணிப்புத் தொடர்பில் அவர் உரத்த குரலில் இணைத்தலைவர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

உரத்த குரலில் அவர் மக்கள் பிரச்சினைகளை தெரிவிக்க தொடங்கியதை அடுத்து, எங்கே தான் ஒலி வாங்கியை பறித்த விடயத்தினையும் சொல்லிவிடுவாரோ என்று எண்ணிய அந்த அதிகாரி விரைந்து மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

தீவகப் பிரச்சினை பேசப்பட்டு முடிந்த பின்பே குறித்த அதிகாரி மண்டபத்திற்குள் மீளவும் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post