ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க அரசு தயார் - Yarl Thinakkural

ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க அரசு தயார்ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7பேரையும் விடுவிக்க மாநில அரசு தயாராகவுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தில் மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசுகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை அரசு விடுதலை செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ராகுல் காந்தியும் அவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார்.

எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்து பேசுகையில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் கையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தால் பேரறிவாளன் உட்பட 7பேரையும் மாநில அரசு விடுதலை செய்து விடும்.

முதல்வர் ஜெயலலிதா இருந்த போது ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்த வரையில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ, அதற்கேற்ப தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றார்.

Previous Post Next Post