ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது ஆபத்தான முன்னுதாரணம் - Yarl Thinakkural

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது ஆபத்தான முன்னுதாரணம்


ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகி விடும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விளக்கமளித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 27ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக நீதிமன்றம் மத்திய உள்துறையின் விளக்கத்தை கேட்டது. பின்னர் மத்திய அரசு 7பேரின் உடல்நிலை, குடும்ப சூழ்நிலை, பொருளாதார பின்னணி உள்ளிட்ட விபரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

அதற்கு தமிழக அரசு விளக்கமளித்தது. மேலும் மத்திய உள்துறை 7பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தையும் கேட்டது. தமிழக அரசின் பதில்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை பரிசீலித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜீவ் கொலையாளிகள் 7பேரையும் விடுவிக்க முடியாது என்று அறிவித்தார். ஜனாதிபதி தனது உத்தரவில் என்ன கூறியுள்ளார் என்ற விபரம் தமிழக அரசுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் 4பேர், இந்தியர்கள் 3பேர் என 7பேரையும் விடுவிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகி விடும். மேலும் இது சர்வதேச அளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்து ஈடு இணையற்ற தவறுகளை இவர்கள் செய்திருக்கின்றனர். சரித்திர குற்றவியல் குற்றத்தை இந்நாட்டில் செய்திருக்கின்றனர். அவர்களுடைய செயற்பாடுகள் மிகவும் ஒழுக்க கேடானதாகும்.

வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு மிகவும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அதில் 9பொலிஸ் அதிகாரிகள் உட்பட 16பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொலையாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. எனவே அவர்களை விடுவிக்க முடியாது. என ஜனாதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Previous Post Next Post