ராஜீவ் கொலை வழக்கில் தமிழர்களை விடுவிக்க இரு வாய்ப்புக்கள் - Yarl Thinakkural

ராஜீவ் கொலை வழக்கில் தமிழர்களை விடுவிக்க இரு வாய்ப்புக்கள்

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 27ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழு தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க குடியரசுத் தலைவர் மறுத்திருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பின்னராவது இவர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தை இனிவரும் காலங்களில் எப்படிக் கையாள வேண்டும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.

எழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை சிறப்பாக நடாத்தி சாதகமான தீர்ப்பை பெறுதல், இரண்டாவது அரசியலமைப்பு சட்டத்தின் 161ஆவது பிரிவின் படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எழு தமிழர்களையும் விடுதலை செய்வது ஆகும்.
நீதிமன்றத்தின் ஊடாக ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என்பதாலும், மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளாது என்பதாலும் முதலாவது வாய்ப்பின்படி இவர்களை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு.

எனவே தமிழக அரசின் முன் உள்ள கடைசி வாய்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161ஆவது பிரிவின் படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமே.

இதை உணர்ந்து உடனடியாக அமைச்சரவையை கூட்டி 161ஆவது பிரிவின் படி எழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதை தமிழக ஆளுநருக்கு அனுப்பி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Previous Post Next Post