துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? -தமிழக அரசிடம் கேள்வி- - Yarl Thinakkural

துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? -தமிழக அரசிடம் கேள்வி-


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உத்தரவிட்டது யார்? சூடு நடத்துவதற்கு முன்னர் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான அரசாணையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

தூத்துக்குடி கந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், துப்பாக்கிச் சூடு நடத்தபட வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
அதன்படி அதிக கூட்டத்தை கலைப்பதற்கு கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தியிருக்க வேண்டும். அதன்பின் வாட்டர்ஜக் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் உத்தியை பயன்படுத்தியிருக்க வேண்டும். அதன்பின் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க வேண்டும்.

பின்பு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அதன்பிறகே போராட்டக்காரர்களின் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 9பேர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாகல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Previous Post Next Post