பேசிப் - பேசியே பொறுமை இழக்கச் செய்த மாவை: ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விசனம்! - Yarl Thinakkural

பேசிப் - பேசியே பொறுமை இழக்கச் செய்த மாவை: ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விசனம்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட ஒவ்வொரு பிரச்சினைகள் தொடர்பிலும் நடைபெற்ற ஆராய்வுகளின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பின்னர் நீண்ட தொகுப்புரை ஒன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வழங்கியமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தீவகத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள், பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காணி சுவீகரிப்பு, வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள், அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பிலான தீர்மானங்களும் நினைவேற்றப்பட்டிருந்தன.

இதன் போது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்து, அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். அக் கோரிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் இருந்து அரச உத்தியோகஸ்தர்கள் தமது விளக்கங்களையும், அதற்கான தீர்வுகளையும் வழங்கியிருந்தனர்.
இதன் போது நீண்ட விவாதங்களும் இடம்பெற்றன. விவாதங்களின் பயனாக பிரச்சினைகளை தீர்பதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்த.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இணைத் தலைவர்களின் ஒருவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைப்பதை விட முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும், அதன் மீத நடைபெற்ற பாதப் பிரதிவாதங்களையும், பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் நடைபெற்ற விடயங்களையும் தொகுத்து நீண்ட கருத்தினை வழங்குவதிலேயே குறியாக இருந்தார்.

குறிப்பாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் பேசப்பட்டது. இதன் போது பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக இருந்தால் போதும், மேலதிகமாக மக்களின் காணிகளை சுவீகரித்து, சர்வதேச விமான நிலையம் இப்போது இங்கு தேவை இல்லை என்றும், மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 

தீர்மானிக்கப்பட்ட பின்னர் கருத்து தெரிவித்த குறித்த பாரளுமன்ற உறுப்பினர், பிரதமர் 2 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது பேசப்பட்ட விடயங்களில் இருந்து, ஆரம்பித்து கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தார்.

இதன் போது வடக்கு மாகாண சபை உறுப்பனர் ஜெயசேகரம் கருத்தினை முன்வைக்க முற்பட்ட போது, ஆத்திரமடைந்த குறித்த பாரளுமன்ற உறுப்பினர், உங்களுக்கு தெரியாத விடயங்களை சொல்கின்றே, உங்களுக்கு விடயங்கள் தெரிந்தார் சொல்லுங்கள் என்று அதிகார தொணியில் தெரிவித்து அது தொடர்பிலும் அப் பாராளுமன்ற உறுப்பினர் நீண்ட தொகுப்புரை ஒன்றினை வழங்கியிருந்தார்.

நேரம் போதாமையால் கூட்டத்தினை ஒத்திவைப்பதற்கான தேவை உள்ள போது, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு விடயங்களுக்கும் வழங்கிய தொகுப்புரை கூட்டத்தில் இருந்த சக மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகளையும் முகம் சுழிக்க வைத்திருந்ததை காணக் கூடியதாக இருந்து.
Previous Post Next Post