கஞ்சா பயன்படுத்த கனடாவில் அனுமதி - Yarl Thinakkural

கஞ்சா பயன்படுத்த கனடாவில் அனுமதி

உற்சாகத்திற்காக கஞ்சா பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக நேற்றுமுன்தினம் அந்நாட்டின் செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் 52:29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்களை இந்த சட்டம் அளிக்கிறது. ஜி-7 நாடுகளில் கஞ்சாவை உற்சாக பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முதல் நாடு என்ற பெயரை கனடா பெற்றுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. 1923ஆம் ஆண்டில் அந்நாட்டில் கஞ்சா வைத்திருப்பது குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நம் குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது. அதேபோல் சமூக குற்றவாளிகள் இலாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது என்று தெரிவித்திருந்தார். இந்த சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு நாட்டின் அரசியலமைப்பு ஒப்புதல் இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. பின்னர் அதிகாரபூர்வமாக ஒரு நாளை அரசு தேர்ந்தெடுத்து அன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வரும்.

மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில் தற்போது கஞ்சா விற்பனைக்கு கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது.


Previous Post Next Post