ராஜீவ் கொலை குற்றவாளிகள் விரைவில் விடுதலை: அரசு நடவடிக்கை - Yarl Thinakkural

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விரைவில் விடுதலை: அரசு நடவடிக்கை


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வரும் ஏழு தமிழர்களின் வழக்கு ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இக்குற்ற வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7பேரும் கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்று வருகின்றனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்தது. அது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி மாதம் பேரறிவாளன் உட்பட 7பேரையும் விடுவிக்கும் முடிவு உள்ளதா? இல்லையா? என்பதை மத்திய அரசு 3மாத காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தமிழக அரசு தண்டனை பெற்று 7பேரின் உடல் நிலை, அவர்களது குடும்ப சூழல் மற்றும் அவர்கள் மீதுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.


Previous Post Next Post