வடக்கின் கடற்றொழிலை அழிக்க சதி -கஜேந்திரகுமார் எச்சரிக்கை - - Yarl Thinakkural

வடக்கின் கடற்றொழிலை அழிக்க சதி -கஜேந்திரகுமார் எச்சரிக்கை -

தமிழ் தேசத்தின் பொருளாதார
முது கெலும்பாக உள்ள கடற்றொழிலையும், கடல் வளங்களையும் அழிக்க முயலும் திட்டமிட்ட சதிச் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழர் தேச வளங்களை அழிக்கும் முயற்சியின் ஒரு வடிவமே மருதங்கேணியில் தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்கிருக்கும் செயற்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்கள் 1500 இற்கும் மேற்பட்டவர்களை உடன் வெளியேற்றக்கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்துக் கருத்து கூறும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் கரையோர பகுதிகளை தமிழீழ விடுதலை புலிகள்  விசேட பகுதியாக பிரகடனப்படுத்தி வேலைத்திட்டங்களை செய்திருந்தார்கள்.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களும் வட-கிழக்கு மாகாணங்களின் கரையோரங்களை மையப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வட-கிழக்கு கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஒடுங்கினால் தமிழ் தேசத்தை ஒடுக்குவதற்குச் சமனாகும் என்பதே இதன் நோக்கம். தமிழர் தேசத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் கடற்றொழிலிலும் விவசாயத்திலும் தங்கியிருக்கின்றது. இது இரண்டையும் அழித்தால் தமிழ்தேசத்தை அழிப்பதற்கு சமனாகும் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு, கொக்கிளாய் தொடக்கம் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டார்கள். அங்கு தொடங்கி வடமராட்சி கிழக்குவரை திட்டமிட்டு தமிழரல் லாதவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இவை அனைத்துக்கும் இந்த நாட்டின் இராணுவமும், கடற்படையும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே இந்த விடயத்தை எமது மக்கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இன்றைக்கு மருதங்கேணியில் இருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்றினால் அது வேறு இடத்தில் நடக்கும். அதற்காக தென்பகுதி மீனவர்களை வெளியேற்றகூடாது என அர்த்தப்படாது.

இந்த விடயத்தை மக்கள் சரியாக உணர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாக 40 வருடங்கள் பொருளாதாரரீதியாக பின்தங்கியிருக்கும் எமது மக்கள் ஒட்டுமொத்தமாக எமது கரையோர வளங்களையும், கடற்றொழிலாளர்களையும் அழிக்க நினைக்கும் திட்டத்திற்கு எதிராக போராடவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
Previous Post Next Post